Advertisment

அரசு பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்; பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேச்சு!!

அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒருபாடமாக வைத்து தமிழ்வழி பாடத்தை ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேசினார்.

Advertisment

புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் முப்பெரும் விழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.வி.எஸ்.திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்மாவட்டத்துணைத் தலைவர்கள் ம.சிவா,ச.சவரிமுத்து ,மாவட்டத் துணைச் செயலாளர்கள் து.அந்தோணிமுத்து,ரெ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisment

tn  govt

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராசு வரவேற்றுப் பேசினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் விழாவில் பேசியதாவது: அனைத்து துறைக்கும் முன்னோடியாக இருப்பது கல்வித்துறையே. வருங்கால தலைவர்களை, விஞ்ஞானிகளை, அறிவாளிகளை,தொழில்நுட்பவல்லுநர்களை எல்லாம் வளர்த்து விடுவது ஆசிரியர்கள் தான்.. எழுத்தறிவித்தவன் இறைவன் என்று கூறப்பட்டு வந்த ஆசிரியர்களை பார்த்து இன்றைக்கு இருக்கிற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருமையில் பேசுகிறார். அவரது துறையில் உள்ள அமைச்சர் கே.சி.விரமணியும் டாஸ்மார்க்கில் இருந்து வரும் பணத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் என்கிறார்.. ஆகவே இப்படிபட்ட பண்பில்லாமல் பேசும் முதலமைச்சர், அமைச்சர் வீரமணியை கண்டித்து மாநிலம் முழுவதும் ஒரு நாள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினோம். இனியும் அவர்கள் அவ்வாறு பேசினால் வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி சிறு விடுப்பு போராட்டமும், அடுத்து நவம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த இருக்கிறோம்.

போராட்டத்தை ஆயத்தம் செய்யும் வகையில் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள், மக்கள் மேல் அனுதாபம் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே கூட போராடிய எங்களை அழைத்து ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களை அழைத்து அரசு ஊழியர் ஆக்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட போராடிய எங்களை அழைத்து பேசி உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

The govt

இன்று ஆசிரியர்களுக்கு பெரும் சலுகைகள் அனைத்தையும் வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். பெருந்தலைவர் காமராஜர் கிராமம் தோறும் பள்ளிகளை தொடங்கினார். அவரை தொடர்ந்து டாக்டர் கலைஞர் பள்ளிகள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இருக்க கூடாது என முடிவு எடுத்து பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து வைத்தார். ஆனால் இன்று பள்ளிகளை மூடி அதற்கு இணையாக மதுக்கடைகளை திறந்து வைக்கிறார்கள். இப்போது உள்ள அமைச்சர் செங்கோட்டையன் கூட அரசுப் பள்ளி மூடப் போவதாக கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளை நடத்தும் தனியார்களிடம் உரிய ஆதாயத்தை பெற்றுக் கொண்டு அப்பள்ளிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகளை மூடுகிறார்கள்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்து தமிழ்வழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும். மேலும் நாங்கள் இரண்டு ஆண்டுகளாக 114 சங்கங்கள் சேர்ந்து நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப் பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கப் பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும் அரசு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சி.கண்ணன், ச.குணசேகரன், கி.ஜெசிந்தாமேரி ஆகியோருக்கும் புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுபெற்ற வீ.ஜோதிமணி, க.சுகுமாரி, வ.தங்கத்துரை மற்றும் முனைவர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமையாசிரியர் அ.பிலிப், தி.செயா ஆகியோருக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி இயக்க ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் தமிழக ஆசிரியர் கூட்டணியில் இருந்து விலகி வெ.யோகராஜ், தி.அம்பிகாபதி தலைமையில் கறம்பக்குடி ஒன்றிய ஆசிரியர்களும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியிலிருந்து விலகி ந.இரவிச்சந்திரன் தலைமையில் அன்னவாசல் ஒன்றிய ஆசிரியர்களும், க.பழனிவேலு தலைமையில் கந்தர்வக்கோட்டை ஒன்றிய ஆசிரியர்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..

மாநில,மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.. விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் நன்றி கூறினார்

pudukkottai close govt school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe