n

Advertisment

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில்ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பெற்றோர்கள், கல்வியாளர்கள், கொடையாளர்களின் உதவியால் ஏராளமான அரசுப் பள்ளிகள் நவீனமயமாகி வருகிறது. இந்தப் பணிகளைச் செய்ய தமிழ்நாடு அரசு நமக்கு நாமே திட்டத்தில் 3ல் ஒரு பங்கு கிராமத்தினரிடம் பெற்று 2 பங்கு தொகையை அரசே கொடுக்கும் நல்ல திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத்திட்டத்தின் மூலம் ஏராளமான பள்ளிகள் பயனடைந்துள்ளது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக இந்தத்திட்டத்தால் பயனடைந்த பள்ளிகளைவிட அவதிப்படும் பள்ளிகளே அதிகமாக உள்ளது. இப்படி ஒரு நல்ல திட்டத்தை முடக்கி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் தான் இந்தஇடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

திருவரங்குளம் ஒன்றியம் சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்குத்திறன் வகுப்பறை அமைக்க மெகா பவுண்டேஷன் நிமல்ராகவன் முன்வந்து நமக்கு நாமே திட்டத்தில் பெற ரூ. 33 ஆயிரத்தை பள்ளிக்கு வழங்கினார். அந்தத்தொகையை நமக்கு நாமே திட்டத்தில் பயனடைய வங்கி வரைவோலை பெற்று கடந்த ஜூன் 19 ஆம்தேதி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்துடன், வரைவோலையும் இணைத்து வழங்கியுள்ளனர்.

nn

Advertisment

அதேபோல அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு திறன் வகுப்பறைக்கு கிராமத்தினரின் முயற்சியில் ரூ. 33 ஆயிரத்திற்கான வரைவோலையும் விண்ணப்பமும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தத்தகவலும் இல்லை. இந்தநிலையில் இதே பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் தலா ஒரு திறன் வகுப்பறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தொடக்கப் பள்ளிக்கான விண்ணப்பம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்துள்ளது. ஆனால் உயர்நிலைப் பள்ளிக்கான விண்ணப்பம் என்ன ஆனது என்றே தெரியாமல் தவிக்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். எந்த அலுவலகத்தில் கேட்டாலும் எங்களிடம் இல்லை என்றே பதில் வருகிறது என்கிறார்கள் கிராமத்தினர்.

இது குறித்து சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் தங்க. கண்ணன் நடந்ததை விவரிக்கிறார்,''சமீப காலமாக அரசுப் பள்ளிகள் பொதுமக்கள் பங்களிப்போடு நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோலதான் சேந்தன்குடியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வைக்க பொதுமக்கள் பங்களிப்பு நிதி கிடைத்தது. இதனை நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டினால் 2 மடங்கு தொகையும் சேர்த்து அரசு வழங்கும்.இந்தத்திட்டத்தில் இரு பள்ளிகளுக்கும் தலா ரூ. 33 ஆயிரம் வங்கி வரைவோலை பெற்று ஜூன் 19 ஆம்தேதி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்துடன் இணைத்து கொடுத்தோம். அதே நேரத்தில் கல்வித்துறை அமைச்சர் இரு ஸ்மார்ட் போர்டு வழங்க கடிதம் அனுப்பியுள்ளார். 4 மாதங்களுக்குப் பிறகு தொடக்கப் பள்ளிக்கான விண்ணப்பம் திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் வந்துவிட்டது. ஆனால் உயர்நிலைப்பள்ளி விண்ணப்பம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

அதை அறிந்துகொள்ள இன்று 19 ஆம்தேதி திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் போனோம். தொடக்கப்பள்ளி விண்ணப்பம் தான் எங்களிடம் வரும் அதேபோல வந்துவிட்டது. ஆனால் உயர்நிலைப் பள்ளி விண்ணப்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குத்தான் போகும், அங்கே போய் பாருங்கள் என்றனர். அங்கே போனால் எங்களுக்கு வரவில்லை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் போங்க என்றனர். அங்கே போனால் மாவட்டத்திட்ட அலுவலகம் போய் பாருங்க என்றனர். மாவட்டத்திட்ட அலுவலகம் போனால் எங்களிடம் இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போய் பாருங்க என்றனர். அங்கே போனால் மாவட்டத்திட்ட அலுவலகம் போங்க என்று மறுபடியும் முதலில் இருந்து தொடங்கினார்கள்.

Advertisment

இத்தனை அலுவலகமும் போய் சுற்றிவிட்டோம் ஆட்சியரிடம் கொடுத்த விண்ணப்பம் என்ன ஆச்சு? எங்கே அனுப்பப்பட்டது என்று கேட்ட பிறகு, குறிப்பிட்ட தேதியில் பெறப்பட்ட விண்ணப்பம் 24.6.2023 அன்று சம்பந்தப்பட்ட டேபிளுக்கு வந்து ந.க எண் போடப்பட்டு 30.6.2023 அன்று ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநருக்கு அனுப்பிவிட்டோம் என்றனர். மறுபடியும் மாவட்டத்திட்ட அலுவலகம் வந்தால் எங்களிடம் விண்ணப்பம் இல்லை என்றவர்கள் ந.க எண் தேதி சொன்ன பிறகு தேடிப் பார்த்து ஆமா வந்திருக்கு என்றனர். இத்தனை மாதம் ஏன் விண்ணப்பம் மீது நடவடிக்கை இல்லை என்று கேட்டால், தகவல் சொல்லி இருப்போமே என்று சாதாரணமாக சொல்கிறார்கள்.

நல்ல ஒரு அரசாங்க திட்டத்தை எத்தனை மோசமாக செயல்படுத்துகிறார்கள் பாருங்கள். சரி கல்வித்துறை அமைச்சர் அனுப்பிய மற்றொரு ஸ்மார்ட் போர்டுக்கான நடவடிக்கை என்ன என்று கேட்டால், வழக்கம் போல எங்களிடம் வரவில்லை என்ற பதிலே வந்தது. ஒரு அமைச்சர் அனுப்பிய கடிதமே எங்கே உள்ளது என்று தெரியாத நிலையில் மாவட்டத்திட்ட அலுவலகம் உள்ளது. இதில் எப்படி ஏழைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவது. சில ஆண்டுகளுக்கு முன்பு உடனுக்குடன் வேலைகள் நடந்தது இப்ப ரொம்ப மோசமாக உள்ளது'' என்றார் வேதனையோடு.

இதேபோல அறந்தாங்கி ஒன்றியத்தில் அரசுப் பள்ளிக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பமும் வரைவோலையும் தேதி காலாவதி ஆகும் வரை ஒன்றிய அலுவலகத்திலேயே வைத்திருந்து விட்டு காலாவதி ஆன பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திருப்பி கொடுத்துள்ளனர். அந்த பள்ளியை சிறப்பாக மாற்ற நிதி கொடுத்த கொடையாளர் ரூ.1 லட்சத்தையும் திரும்ப வாங்கி சென்றுவிட்டதால் அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்த அரசுப் பள்ளி அடிப்படை வசதியின்றியே உள்ளது.

அதே அறந்தாங்கி ஒன்றியத்தில் மற்றொரு அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொறுத்த நமக்கு நாமே திட்டத்தில் விண்ணப்பத்துடன் வரைவோலை கொடுத்ததை வந்து திருப்பி வாங்கிட்டு போங்கன்னு ஒன்றிய அலுவலக எழுத்தர் ஒருவர் வழக்கம் போல சொல்றாராம். இதுபோல் மாவட்டம் முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இப்படி அரசுத்திட்டங்களால் கிராமப்புற மாணவர்கள் பலனடையக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ள அதிகாரிகள் மீது என்ன தான் நடவடிக்கையோ? இது சம்பந்தமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பரியாகருத்தை அறிய தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. அவருக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்து மீண்டும் தொடர்பு கொண்டபோது ஃபோன் எடுக்கவில்லை.

மக்கள் நலத் திட்டங்கள் யாருக்காக?