Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்லூரி களப்பயணம் - பேண்டு வாத்தியத்துடன் வரவேற்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Government School Students' College Field Trip-Welcome with Band Instrumental

கடலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு கல்லூரிகளில் சேர ஆர்வமூட்டல் நிகழ்ச்சி 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கடலூர் பெரியார் கலை கல்லூரியில் நடைபெற்றது.  

கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி  தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், வி. காட்டுப்பாளையம், இராமாபுரம் மேற்கு, திருவந்திபுரம், பாலூர், நெல்லிக்குப்பம், காரைக்காடு, கோழிப்பாக்கம், தூக்கணாம்பாக்கம், நடுவீரப்பட்டு, சி.என். பாளையம், வண்டிப்பாளையம் கடலூர் மாநகரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் 435 மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். கல்லூரிக்கு வருகை தந்த பள்ளி மாணவ மாணவியருக்கு கல்லூரி வாயிலில் பேண்டு வாத்தியங்கள் முழங்க வெகு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.  

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையிலும், பிளாஸ்டிக்கின் தீமைகளை மாணவ மாணவியர் உணரச் செய்யும் வகையிலும், வருகை தந்த பள்ளி மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் மஞ்சப்பையில் எழுது பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பள்ளி வகுப்பை முடித்த பிறகு அரசு கல்லூரிகளில் எவ்வாறு சேருவது, மேலும் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, கல்லூரியில் பயில்வதற்கு அரசால் வழங்கப்படுகின்ற உதவித்தொகை மற்றும் உதவித் திட்டங்கள், இக்கல்லூரியில் உள்ள விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து மாணவ மாணவியருக்கு மிகத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது.

மேலும் கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகள், ஆய்வகங்கள், நூலகம் மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் போன்ற பல்வேறு சிறப்புக் குழுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பள்ளி மாணவ பார்வையிட்டனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான முனைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் எஸ். மித்ரா, முனைவர் கு. அருள்தாஸ், முனைவர் ஆர். பெரியநாயகி மற்றும்  ஆசிரியர் பயிற்றுநர்கள் ர. உமா, பத்மப்ரியா, தனவேல, ஐயப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பங்கேற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கா. கீதா வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவாக வேதியியல் துறை தலைவர்  முனைவர் பா. ஷர்மிளா இந்திராணி நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்