
நீட் தேர்வு வருவதற்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்தும் படிக்க வாய்ப்புகள் கிடைத்தது. நீட் வந்த பிறகு, அரசுப் பள்ளிமாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவாகவே போனது. கடந்த 2018 ம் ஆண்டு 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 2019 ம் ஆண்டு 6 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இதனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் கனவு பொய்த்துப் போனது. இதனால் பல மாணவர்களின் உயிர்களும் பறிபோனது.
இந்த நிலையில் தான் கடந்த 2020 ம் ஆண்டு நீட் தேர்வு அரசுப்பள்ளி கிராமப்புற மாணவர்களுக்கு தடையாக இருப்பதை உடைத்தெறியும் பொருட்டு ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இட ஒதுக்கிட்டை அடுத்து சுமார் 433 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்த சுமார் 20 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய முதல் ஆண்டில், நீட் தேர்வில் 180 க்கு கீழ் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி, விடுதி செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டதால் ஏழை மாணவர்களின் பண சுமையும் குறைந்தது. தற்போது அந்த அரசுப் பள்ளி ஏழை மாணவர்கள் 7.5% உள் இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பை படித்து முடித்துள்ளனர். நேற்று இரவு இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியதை அடுத்து, மாணவர்கள், அவர்கள் படித்த அரசுப்பள்ளி ஆசரியர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் என அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம், 7.5% இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் தலைமுறை மருத்துவர்களாக உருவாகியுள்ளனர்.