Skip to main content

அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவி இரண்டாமிடம்; முதல்வர் வாழ்த்து

 

  government school girl won second place  violin competition

 

சிதம்பரம்  ரயிலடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி திவ்ய பூங்கொடி பயின்று வருகிறார். இவர் மிகவும் எளிமையான குடும்பத்தைச்சார்ந்தவர். இவரது தந்தை இசைக்கச்சேரியில் புல்லாங்குழல் இசை கலைஞராக உள்ளார். இந்நிலையில் மாணவி தானாக வயலின் மற்றும் செவ்வியல் இசையின் மீது ஏற்பட்ட தாக்கத்தால் வயலின் செவ்வியல் இசையைக் கற்று வந்துள்ளார்.  இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் குறுவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தைப் பெற்றதால் இவர் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பெற்றார்.

 

இதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் கலாஉற்சவ் போட்டி ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாநிலத்திலிருந்து பங்கு பெற்ற மாணவ மாணவிகளிடம் போட்டி போட்டு வயலின் மற்றும் செவ்வியல் இசையில் அகில இந்திய அளவில் 2-வது இடம் பெற்றுள்ளார். இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். வெற்றிபெற்ற மாணவிக்கு  ஓய்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி, உதவி தலைமை ஆசிரியர் செல்வகணபதி, ஆசிரியர் ராஜ்மோகன், இசைஆசிரியர் மீனாட்சி, வகுப்பு ஆசிரியர் உமாதேவி உள்ளிட்ட பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சக மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து பள்ளியின் இசை ஆசிரியை மீனாட்சி கூறுகையில், “இந்த மாணவி மிகவும் ஏழ்மை நிலையில் வயலின் செவ்வியல் இசையை நல்ல முறையில் பயின்று வருகிறார். மாணவியின் ஆர்வத்தைப் பார்த்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வருகிறோம். இவர் அகில இந்திய அளவிலான போட்டிக்குச் செல்வதற்கு நிதி வசதி இல்லாமல் மிகவும் சிரமம் அடைந்தார். அப்போது பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து மாணவிக்கு உதவி செய்தோம்.  இதில் ஒரு ஆசிரியர் வயலின் கருவியைப் புதிதாக வாங்கி கொடுத்தார். இந்த உதவியை அந்நேரத்தில் செய்யவில்லையென்றால் மாணவி அகில இந்திய அளவிலான போட்டிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். எனவே இதுபோல் பல மாணவிகள் தனித்திறமையில் தனித்து பல்வேறு வெற்றிகளைப் பெற்றுவருகின்றனர்” என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !