தமிழ்நாட்டில் பல கிராமங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதே நேரத்தில் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருந்தாலும் கூட மாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் எண்ணிக்கை உள்ள அவல நிலையும் உள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள கிராமத்தில் பள்ளிப் பருவ குழந்தைகள் இருந்தாலும் கூட அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை தவிர்த்துவிட்டு பணம் செலவு செய்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது.
இதேபோல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த சுமார் 35 அரசுப் பள்ளிகளை மூடிய அரசு அங்கு நூலகங்களை திறந்தது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் குளத்தூர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் சின்னபட்டமங்கலம் கிராமங்களில் பள்ளி பருவ மாணவர்களே இல்லை என்ற தவறான காரணம் கூறி இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளை மூடிய அதிகாரிகள் நூலகம் திறந்தனர். இந்நிலையில் நக்கீரன் முயற்சியால் கிராம மக்களுடன் பேசிய பிறகு அதிகாரிகளால் மாணவர்கள் இல்லாத கிராமம் என்று மூடப்பட்ட இரு பள்ளிகளிலும் தலா 10 மாணவர்களை ஒரே நாளில் சேர்த்து அந்த இரு பள்ளிகளும் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே மூடப்பட்டு திறக்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிகள் தான்.
இதன் பிறகும் தற்போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவர்களுடன் செயல்படுகிறது. திருவரங்குளம் ஒன்றியம் கே.வி.கோட்டை ஊராட்சி தவளைப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு வரை 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது 3 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். 2, 4, 5 ம் வகுப்புகளில் தலா ஒரு மாணவர் படிக்கிறார். இதற்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியில் உள்ளார்.
ஏன் இப்படி மாணவர்கள் இல்லாத பள்ளியானது? என்ற நமது கேள்விக்கு.. ''ரொம்ப வருசமா செயல்படுகிறது இந்தப் பள்ளி நல்ல கட்டடம் இருக்கு நிறைய குழந்தைகள் படித்தார்கள். தற்போதும் கிராமத்தில் உள்ள நிறைய குழந்தைகள் வெளியூர் போறாங்க. காரணம் இதே ஊரைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை. இதனால் கற்றல் திறன் குறைகிறது. இதைப் பார்த்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்புறாங்க. இப்ப கூட 3 குழந்தைகள் வருவது கூட தலைமை ஆசிரியரின் பேரப்பிள்ளைகள் தான். அவருக்கு சிக்கல் வந்துடாம இந்தக் குழந்தைகளை அனுப்புறாங்க. இதே நிலை நீடித்தால் அடுத்த வருசம் பள்ளியை மூடிடுவாங்க'' என்கின்றனர்.
ஒரு பள்ளிக்கு, ஒரு மாணவருக்கு என்று அரசாங்கம் நிறைய செலவு செய்தாலும் கூட இப்படி மாணவர்களே இல்லாத பள்ளிகளை உருவாக்குவது யார்? இது போன்ற பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கும் போதே அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இப்படி மூடக்கூடிய நிலைக்கு போகிறது என்ற கேள்விகளையும் எழுப்புகின்றனர். இதேபோல் மாவட்டத்தில் கூடலூர், கட்ராம்பட்டி என பல கிராம பள்ளிகள் இப்படி ஒற்றை இலக்க மாணவர்களோடு செயல்படுவது வேதனையாக உள்ளது. அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கைகளே இது போன்ற பள்ளிகளை தக்க வைக்கும்.