அரசு உதவித்தொகை சுருட்டல்; இருவரிடம் 15 லட்ச ரூபாய் மீட்பு!      

Government scholarship fraud in Salem

சேலம் தெற்கு வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, கணவரை இழந்த பெண்கள், திருநங்கை உள்ளிட்ட பிரிவினருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாகவழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பயனாளிகள் விவரங்களைத்தணிக்கை செய்தபோது திருநங்கைகளான சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச்சேர்ந்த சாந்தி (50), குகையைச் சேர்ந்த மாதம்மாள் (54) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாற்றி வந்த தற்காலிகப் பெண் ஊழியரான பாலம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (21) ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை அரசுத்தரப்பில் செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

தங்கள் கணக்கில், தவறுதலாகப் பணம் வந்துள்ளது என்று அறிந்த பிறகும் அவர்கள் மூவரும் பணத்தை மீண்டும்அரசுக் கருவூலத்தில் செலுத்தாமல், அதைத்தங்கள் சொந்த உபயோகத்திற்குக் கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருநங்கைகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் மொத்தப் பணமும் எடுக்கப்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் அலுவலக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் மூன்று ஆண்டுகளாக மூவரின் வங்கிக் கணக்குகளிலும் உதவித்தொகையை விடப் பல ஆயிரம் மற்றும் சில லட்சங்கள் வீதம் செலுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, திருநங்கை சாந்தி மற்றும் தற்காலிகப் பெண் ஊழியர் பவித்ரா ஆகியோரிடம் இருந்து முதல் கட்டமாக 15 லட்சம் ரூபாய்மீட்கப்பட்டு உள்ளது. மீதப்பணத்தையும் மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். இதன் பின்னணியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இவ்வளவு பணம் குறிப்பிட்ட சிலரின் வங்கிக் கணக்கிற்கு மட்டும் சென்றது எப்படி? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

police Salem scholarship
இதையும் படியுங்கள்
Subscribe