Skip to main content

தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப்படாத கல்விச் செலவு தொகையை வழங்க அரசுக்கு உத்தரவு!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
highcourt chennai

 

2017-18 முதல் 2019-20 வரையிலான கல்வியாண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கொடுக்கப்படாமல் உள்ள கல்விச் செலவுத் தொகையை வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2009-ஆம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு  நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத் தொகையாக,  சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

 

தமிழகத்தில், 2016-17 -ஆம் ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட ஒரு மாணவருக்கு, 25,000 ரூபாயை செலவுத்தொகையாக நிர்ணயித்து,  தமிழக அரசு வழங்கி வந்தது.

 

இந்த தொகை, 2017-18 -ஆம்  ஆண்டில், 11,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில், மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020-21 -ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அந்த மனுவில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 83,16,237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது. ஒரு மாணவருக்கு, அரசு சுமார் 32,000 ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, ரூ.11,000 என செலவு நிர்ணயித்தது தவறாகும். 2017-18 முதல் 2019-20 -ஆம் கல்வியாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத்தொகையை மறு நிர்ணயம் செய்து, மீதத் தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2017-18 முதல் 2019-20  கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகையை ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆறு வாரத்தில் கொடுக்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை கொடுக்கும்படியும், அது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கல்வி உதவித்தொகையை 25,000 ரூபாயிலிருந்து, 11,000 ரூபாயாக குறைத்தது தொடர்பாகவும், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.