Skip to main content

400 ஏக்கர் கோவில் நிலம் மீட்கக் கோரிய வழக்கில் அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

Government ordered to explain in case of recovery of copper sword and land

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவசல பெருமாள் கோவிலின் தாமிர பட்டயத்தையும், 400 ஏக்கர் நிலத்தையும் மீட்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு நாளை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்துள்ள இந்த பொது நல வழக்கில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுடன், 108 திவ்ய தேசங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608ஆம் அண்டில் இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டு, பல்வேறு பூஜைகளும், விழாக்களும் நடத்தப்பட்டதாகவும், 400 ஏக்கர் நிலம் கொடுத்ததற்காகத் தாமிரப் பட்டயம் எழுதி வைக்கப்பட்டதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அந்த தாமிரப் பட்டயம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில்,  மீண்டும் கோவிலுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தாமிர பட்டயம் மாயமானதுடன், தானமாகக் கொடுக்கப்பட்ட 400 ஏக்கரில் தற்போது கோவிலின் கட்டுப்பாட்டில் 7 ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள நிலத்தைக் கோவில் செயல் அலுவலரால் கண்டறிய முடியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.  தாமிரப் பட்டயத்தைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலின் நிலத்தை மீட்கக் கோரி கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், நில அளவையரின் உதவியுடன் 400 ஏக்கர் நிலத்தைக் கண்டறிய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்டதால் வழக்கு நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்