government officer filed complaint against youth thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்திர வனம் கிராமம். இந்த கிராமத்தில் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நிதியை ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நவம்பர் 10 ஆம் தேதி வாக்கில் நடந்துள்ளது. 36 லட்ச ரூபாய் பணியை எடுத்த சேத்பட் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குழாய் பைப் மற்றும் குழாய் பைப் நிற்பதற்கான சிமெண்ட்டால் ஆன ஸ்டெம்ப் நட்டுள்ளார். அப்படி நட்டவர் சரியாகப் பள்ளம் எடுத்து நடாமல் மேம்போக்காக நட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisment

இது குறித்து அதே கிராம மக்கள் சிலர் கேள்வி கேட்க, அது அவ்வளவுதான் என ஒப்பந்ததாரர் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணியின் அவலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்கிற படித்த பட்டதாரி இளைஞர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலானதையடுத்து தமிழகத்தில் அதிகாரிகள் செய்யும் பணியின் லட்சணத்தைப் பாருங்கள் எனபலரும் விமர்சிக்க தொடங்கினர்.

Advertisment

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது சேத்பட் ஊராட்சி ஒன்றிய அலுவலர்(பி.டி.ஓ) ரேணுகோபால் புகார் தந்துள்ளார். புகாரில் இன்னமும் பணியே முடியவில்லை. அதற்குள் இந்த அவலத்தைப் பார் என வீடியோ வெளியிட்டுள்ளார்கள். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகத்தெரிகிறது. புகார் வரப்பெற்றது தொடர்பாக சேத்பட் காவல் நிலையத்திலிருந்து சி.எஸ்.ஆர் தரப்பட்டுள்ளது. இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தங்களது மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

தங்களது கிராமத்தில் இப்படியொரு தரமற்ற பணி நடப்பது தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி நந்தகுமாரிடம் இளைஞர்கள் முறையிட்டுள்ளனர். அவர் அதனை கண்டுகொள்ளவில்லையாம். ஊராட்சி மன்றத்தலைவரின் மாமனார் ஏழுமலை அதிமுகவின் சேத்பட் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளாராம். அவர் இதையெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது எனச் சொன்னார், அதனாலேயே வீடியோ வெளியிட்டுள்ளார்கள். குறைகளை சுட்டிக் காட்டினால் அதனைத்திருத்திக் கொள்ளாமல், வழக்கு போட்டு உள்ளே தள்ளுவேன் என்பது என்ன நியாயம் எனக் கேட்கிறார்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.