government officer car glass broken

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா அலுவலகம், புதிதாக உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம், கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, மர்ம நபர்களால்,13ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஒரு வாகனக் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. இதையடுத்து கண்டாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் சின்னதுரை, அரகண்டநல்லூர் காவல் நிலைத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

Advertisment

இந்தப் புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாலுக்கா அலுவலகத்தில், கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படாத காரணத்தாலும் அலுவலகத்தில் இரவு காவலர் இல்லாததாலும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து வட்டாட்சியர் கார்த்திகேயனை, அவரது வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்தில் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர் ஊழியர்கள். மறுநாள் காலை ஊழியர்கள் அலுவலகத்தை திறந்தபோது, அலுவலகத்தின் 4 ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே செங்கற்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. அதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வட்டாட்சியரின்கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் சின்னதுரை மற்றும் வட்டாட்சியர் கார்த்திகேயன் கண்டாச்சிபுரம் போலீசார் ஆகியோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில், அங்கு விரைந்துவந்த போலீஸார், விசாரணை செய்தனர். தாலுக்கா அலுவலகத்தில் உள்ளே, எந்த விதப் பொருட்களும் திருடப்படவில்லை என்பதை உறுதிசெய்தனர். கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய, மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இது இரண்டாவது முறை என்பதால், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகத்தின்பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.