government  office facilities chennai high court

Advertisment

அரசு அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் வசதிகள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத் திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதையைக் கழிக்க அருகில் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கிருந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வழிவகை செய்யும் சட்டம் 1995- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதும், கடந்த 25 ஆண்டுகளாகக் காகித அளவிலேயே இருக்கிறது. கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்கவில்லை. அதனால், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். இதுதவிர, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிப்பறை, குடிநீர் வசதிகள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மனு மீதான விசாரணையை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.