Skip to main content

பிரதமரை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக உள்ளது தமிழக அரசு: திருநாவுக்கரசர்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


பிரதமரை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக உள்ளது தமிழக அரசு என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள், மாநில துணை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜென்னீஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும் போது..

காங்கிரஸ் கட்சியில் புதிதாக 32 லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்ற திட்டத்தை தேர்தல் நேரத்தில் தொடங்கினோம். அதை வருகிற ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாளுக்குள் 50 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. இதற்கு கிளைகள் தோறும் 25 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சி பலப்படுத்தப்படும். இது முடிந்ததும் வருகிற ஜூலை மாதம் முதல் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்கிறோம். அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடலும், மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டமும் நடத்தப்படும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, தமிழகத்தில் அவருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். டெல்லியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 500 தலித் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல் வருகிற 29-ந்தேதி பிரதமர் மோடியை கண்டித்து டெல்லியில் நடைபெறும் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க தனது தோழமை கட்சிகளுடன் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக்கோரி துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஏற்கனவே அந்த தலைமை நீதிபதி மீது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்காலத்தில் நீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தும் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவிட முடியாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறோம். இது மக்கள் விரும்பும் அரசு அல்ல. தீர்ப்பு வழங்க காலதாமதம் செய்யக்கூடாது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மணல் குவாரிகள் முறையாக திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டால் ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பயன்பெறும். இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள காமராஜர் தொண்டர் ஒருவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும். அதற்கு காங்கிரஸ் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். கட்சியில் கோஷ்டி பூசல் கிடையாது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சி விரைவில் அமைக்கும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் தி.மு.க. ஏன் கையெழுத்து இடவில்லை என்பதை தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி என்பது சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும். தற்போது தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றும் வரை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டுள்ளோம். அதற்கு நேரம் தரவில்லையென்றால் பிரதமர் தமிழகத்திற்கு வரும் போது கருப்பு கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்