Skip to main content

“இனி எந்தக் குடும்பமும் நடுத்தெருவுக்கு வராமல் அரசு காக்க வேண்டும்”-பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அறிக்கை!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

Government must protect every family

 

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து கடனாளியாகும் நிலையும் ஏற்பட்டது. மேலும் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் வங்கி ஊழியர் ஒருவர் சூதாட்ட விளையாட்டுகளினால் ஏற்பட்ட கடன் சுமையால் மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பலரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பாமக நிறுவனர் இராமதாஸ் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் அதன் கொடுங்கரங்களால் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கமாக தனக்கு அடிமையானவர்களை மட்டும் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம், இந்த முறை 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே அழித்திருக்கிறது. இதற்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதித்தால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும். சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பன்னாட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்களைக் கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சோகம் நேற்றுதான் வெளியில் தெரியவந்திருக்கிறது.

 

வங்கியில் நல்ல பதவியில் இருந்த மணிகண்டன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்வரை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்துவிட்ட மணிகண்டன், ரூ.75 லட்சம்வரை கடன் வாங்கியிருந்ததாகவும், அதைத் திரும்பச் செலுத்த முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்த சிலர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று கேட்டதாகவும், அப்போதுதான் கணவனின் கடன்சுமை குறித்து அறிந்த மனைவி, அதைத் தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோதலின் உச்சத்தில்தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு மனிகண்டனும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் தற்கொலை செய்துகொண்ட ஏழாவது மனிதர் மணிகண்டன் ஆவார். இந்த 7 ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளும் ஆண்டுக்கணக்கில் நடந்துவிடவில்லை. மாறாக, வெறும் 4 மாதங்களில் இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிறைவேற்றப்பட்டிருந்த சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆகஸ்ட் 20ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்தடுத்து மேலும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதுதான்.

 

ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு மனிதர்களை அடிமையாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது; அதை விளையாடத் தொடங்குபவர்களுக்கு முதலில் வெற்றியும், பின்னர் தொடர் தோல்விகளும் கிடைக்கும் வகையில் சூதாட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பலமுறை மிகவும் விரிவாக விளக்கியுள்ளேன். அவை இன்னும் மாறவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துடன், அதைத் தட்டிக்கேட்ட மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் ஆகும். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய சட்டம் இயற்றும்படி பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியதன் பயனாகத்தான், முந்தைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து முதலில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி அதைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதில் உள்ள குறைகளைக் களைந்து புதிய சட்டத்தை இயற்றும்படி ஆணையிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நானும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தினேன். எனது அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். ஆனால், அதன்பின் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் இயற்றப்பட்டவில்லை.

 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படக்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கூட, அதில் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் இன்னும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்யும் வாய்ப்புள்ளது.

 

அதனால், உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்காமல், ஏற்கனவே உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவதுதான் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஆகும். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்காக திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றி, ஆன்லைன் சூதாட்டத்தால் இனி எந்தக் குடும்பமும் நடுத்தெருவுக்கு வராமல் அரசு காக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.