
கல்லணையில் இருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துவருகிறது. கொள்ளிடக்கரையோரம் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து தீவாகிவிட்டது. ஒரு புறம் இந்த நிலையென்றால், மறுபுறம் வறட்சியால் தண்ணீர் கேட்டு மக்கள் வீதியில் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில், நாகை மாவட்டம் வருகை தந்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கு சீர்காழி அருகே உள்ள பழையார் முகத்துவாரத்தில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

’’கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. இந்த 5 வாரங்களில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.
இதில், 93 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து ஏறத்தாழ 149 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி., அமராவதியிலிருந்து 6 டி.எம்.சி. என ஏறத்தாழ 170 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் வந்துள்ளது. இதில், 60 டி.எம்.சி. மட்டுமே விவசாயத்துக்காக ஆங்காங்கே அனுப்பட்டுள்ளது. மீதியுள்ள 110 டி.எம்.சி. கடலில் வீனாக கலந்திருக்கிறது.
கொள்ளிடத்தின் வழியாக மட்டும் 80 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட எந்த வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை. கொள்ளிடம் பகுதியிலும் எந்த வாய்க்காலிலும் தண்ணீர் சரியாக செல்லவில்லை. ஆனால், 2 லட்சம் கனஅடி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.

தமிழக அரசிடம் நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாததால், பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் வீனாக கலந்துவருகிறது. நீர்மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருச்சி முக்கொம்பிலிருந்து காட்டூர் வரையில் உள்ள இடைவெளியில் 10 தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி, மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்னையாக வருங்காலத்தில் உருவெடுக்கும். அதற்கு முன்னெச்சரிக்கையாக அரசுசெயல்பட வேண்டும்’’ என்றார்.