Government must ensure that quality surveillance cameras are fitted in women's hostels! - Order to the Government of Tamil Nadu!

தமிழகம் முழுவதும் உள்ள 502 மகளிர் விடுதிகளில், தரமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென, தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் உள்ள 502 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மகளிர் விடுதிகளில் 2,510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு டெண்டர் கோரியது.

Advertisment

'எல்காட்' நிறுவனம் இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தின் மூலமாக திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு வெளியிட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத மனுதாரருக்கு இந்த வழக்கைத் தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து நியாயமான டெண்டர் கோரப்பட்டுள்ளதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமையில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், நியாயமான, வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளைப் பின்பற்றி, மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்களும், உபகரணங்களும் பொருத்துவதை உறுதிசெய்ய வேண்டுமென, தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.