'மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்'! - கே.எஸ்.அழகிரி பேச்சு...

government medical college students congress party ks alagiri

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 52 நாட்களாக மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 51- வது நாள் போராட்டத்தின் போது நேற்று (28/01/2021) கல்விக் கட்டணம் குறித்து குறிப்பிடாமல் உயர்கல்வித்துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மருத்துவக் கல்லூரி மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் மாணவர்கள் கல்விக் கட்டணம் குறைப்பது குறித்து எந்த ஒரு விவரமும் அரசாணையில் இல்லை. இந்த மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசாணை வெளியிட வேண்டும் என அவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

government medical college students congress party ks alagiri

இந்நிலையில் 52- வது நாளாக நடைபெறும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இன்று (29/01/2021) தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று மாணவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, "தமிழக அரசு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணத்தை வசூலிப்பது வேதனையை அளிக்கிறது. ஜனநாயக முறையிலான மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து கல்விக் கட்டணம் குறித்து அரசாணை வெளியிட வேண்டும்.

மாணவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றால், மாணவர்களின் பிரச்சினையை நாளை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.மாணவர்களுடன் போராட்டக் களத்தில் காணொளிக் காட்சி மூலமாகப் பேசுவார். மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு உடனடியாக மாணவர்களின் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்"இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, கே.எஸ்.அழகிரியுடன் காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம், மாநிலச் செயலாளர் பி.பி.சித்தார்த்தன், மாநிலப் பொதுச்செயலாளர் சேரன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவர் பாலதண்டாயுதம் இளைஞர் அணித் தலைவர் கமல்மணிரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Chidambaram medical college students
இதையும் படியுங்கள்
Subscribe