“A Government Medical College in all the districts” - Dr Ramadoss, founder of BAMA

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவுள்ள 100 மருத்துவக் கல்லூரிகளில், இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களுக்கு 6, கடலூர் மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனபாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அந்தஅறிக்கையில், “இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளுடன் இணைந்து அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு நிதியுதவியுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 157 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகளையும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அத்தியாவசியத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனான இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

Advertisment

மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 93 மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளும் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இத்தகைய சூழலில்தான் நான்காவது கட்டமாக 100 மருத்துவக் கல்லூரிகளை 2027-ஆம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவிருக்கும் 100 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 7 கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

Advertisment

மத்திய அரசின் நிதியுதவியுடன் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் திட்டப்படி, மாவட்டத் தலைநகர அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாகத்தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு கல்லூரியும் ரூ.325 கோடியில் அமைக்கப்படும். இதில் 60% மத்திய அரசின் பங்காகவும், 40% மாநில அரசின் பங்காகவும் இருக்கும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இதுவரை 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்குக் குறைந்தது 16 மருத்துவக் கல்லூரிகளாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 58 மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 24 மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடைக்கவில்லை. மூன்றாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட75 மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்திற்கு 15 கல்லூரிகளை ஒதுக்க வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் வலியுறுத்தினேன். அதையடுத்து முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு அது போதுமானதல்ல. அதற்கு இன்னும் 6 மருத்துவக் கல்லூரிகள் தேவை” எனக் கூறியுள்ளார்.