/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c33333_6.jpg)
அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளும்படி, அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராமாபுரம் பகுதியில் இருந்த சாலையை, கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்ததா? எப்போது இந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன? என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்காததால், அரசு நிலத்தைக் கோவில் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்தாலும், அவற்றை இடித்துத் தள்ள வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், குறிப்பிட்ட அந்தப் பகுதியை நேரில் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வுக் குழுவில், மனுதாரர் பிரதிநிதியும், கோவில் நிர்வாகப் பிரதிநிதியும் இடம் பெற வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதேபோல, ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அரசு அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், அரசு நிலம், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)