Government land surveyor arrested for taking bribe

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது அரும்புலி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கருணாகரன், அதே கிராமத்தில் தனது மனைவி கலைச்செல்வி பெயரில் நாலரை சென்ட் வீட்டுமனை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனையை அளவிட்டு, அதை உட்பிரிவு செய்து, தங்கள் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்து தருமாறு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் (சர்வேயர்) பணி செய்துவரும் ஸ்ரீதேவி (28) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அணுகியுள்ளார்.

Advertisment

அப்போது நில அளவையர் ஸ்ரீதேவி, கருணாகரனிடம், “தங்களது வீட்டு மனையை அளந்து உங்கள் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் 7,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்” என்று பேரம் பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கருணாகரன், பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, உடனடியாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சென்று புகார் செய்துள்ளார்.

Advertisment

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய லஞ்சப் பணம் 7,000 ரூபாய் அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்துடன் விழுப்புரம் வழுதரெட்டி பாலாஜி நகரில் வசித்துவரும் ஸ்ரீதேவியின் வீட்டுக்குச் சென்ற கருணாகரன், அங்கு 7,000 ரூபாய் லஞ்சப் பணத்தை ஸ்ரீதேவியிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய ஸ்ரீதேவி, தனது கணவர் வெற்றிவேலிடம் கொடுத்து அதைக் கொண்டுபோய் பீரோவில் பத்திரமாக வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார், கையும் களவுமாக ஸ்ரீதேவியை பிடித்தனர். மேலும், லஞ்சமாக வாங்கிக் கொடுத்த பணத்தைப் பாதுகாக்க எடுத்துச் சென்ற அவரது கணவரையும் மடக்கிப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்கள் இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.