government job money admk leader chennai high court

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி (வயது 51). முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

Advertisment

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற பி.இ., பட்டதாரி வாலிபரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக அசை காட்டி, 17 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த நடுப்பட்டி மணியை கைது செய்தனர். இக்குற்றத்தில் உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் செல்வக்குமார் என்பவரையும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியின்போது, எடப்பாடி பழனிசாமியிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு 30- க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை ஆசை காட்டி 1.50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நடுப்பட்டி மணி ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஜன. 19- ஆம் தேதி விசாரணை நடந்தது. அவரை 25 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது அதற்கு ஈடான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஜன. 24- ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

அதையடுத்து, திங்கள்கிழமை (ஜன. 24) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மணி தரப்பு வழக்கறிஞர்கள், 25 லட்சம் ரூபாய் ரொக்கமோ, அதற்கு ஈடான சொத்து ஆவணங்களோ அவரிடம் இல்லை என்று பதில் அளித்தனர். இதையடுத்து நடுப்பட்டி மணியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.