Government job Fraudster arrested

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்துள்ள செவலபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்த சிங்கனூரைச் சேர்ந்த தேவநாதன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு நண்பர்களாகப் பழகி உள்ளனர்.

அப்போது தேவநாதன், ராஜசேகரிடம் “உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு டி.என்.பி.சி. குரூப் தேர்வுகளில் கலந்து கொண்டால் போதும்; அவர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன்” என்று கூறியுள்ளார். அதனை நம்பி ராஜசேகர் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகியோர் தேவநாதனிடம் தலா ஏழு லட்ச ரூபாய் வசூல் கொடுத்துள்ளனர்.

அதேபோன்று மேல்மலையனூரைச் சேர்ந்த முருகன், ஆனந்தன், அருள்மொழி, தேவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலன், மணி, பூங்காவனம் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் 5 லட்சம், 3 லட்சம் என மொத்தம் 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தேவநாதனும் அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த நாகராஜ், பாபு, தினேஷ், சரவணன் ஆகியோர் பணத்தைப் பெற்று உள்ளனர்.

Advertisment

இவர்கள் கூறியபடி வேலை எதையும் வாங்கித் தராமல், பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்து வந்துள்ளனர். அதனால், பணத்தை பறி கொடுத்தவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்போது, தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி என்பவருக்கும், எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிமேகலை, புஷ்பவள்ளியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஒரு வருஷம் கழித்து இரண்டு லட்ச ரூபாயாக தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய புஷ்பவள்ளி, தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 12 லட்ச ரூபாயை ஒரு ஆண்டில் 24 லட்சமாக இரட்டிப்பாக தருமாறு கொடுத்துள்ளார். அதேபோன்று பாசி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் என பலரிடத்திலிருந்தும் பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார் மணிமேகலை. ஆனால், கூறியபடி ஒரு ஆண்டு கழித்து வாங்கிய பணத்தை இரட்டிப்பாக்கி தரவும் இல்லை, கொடுத்த அசல்பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கிறார்.

Government job Fraudster arrested

Advertisment

இதுகுறித்து புஷ்பவள்ளி, அவலூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசார் முன்னிலையில் 12 லட்ச ரூபாயை குறிப்பிட்ட நாட்களில் தருவதாக வெங்கடேசன் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்படியும் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து மணிமேகலை அவரது கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் புஷ்பவள்ளி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர். அவரது மனைவி புஷ்பவள்ளி தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.