/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2285.jpg)
ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் அரசு மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ். இவர், திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி செல்வி, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிள்ளைகளும் திண்டுக்கல்லில் சுரேஷுடன் வசித்துவருகின்றனர். ஆண்டிபட்டி, பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்துவந்தார். இந்நிலையில், நேற்று (24.11.2021) சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையில் இருந்ததால், அவருடைய உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். வீடு பூட்டியிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவருகின்றனர்.
கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் சென்று விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை செய்தனர். மேலும், டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்துசம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)