
தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பான அரசு ஆணையில், "04/11/2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, 05/11/2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 05/11/2021 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20/11/2021 அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது." இவ்வாறு அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.