
தமிழ்நாடு முழுக்க எட்டாயிரம் கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் SHN, CHN என இவர்கள் மூவாயிரம் பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தாய், சேய் நலப் பிரிவில் செவிலியர்களாக உள்ளனர். நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதியை நேரிடையாக கொண்டு செல்கின்றனர்.
அதேபோல், கரோனா தடுப்பூசி பணியிலும் இவர்களது பங்கு அதிகளவில் இருந்துவருகிறது. ஏற்கனவே உள்ள தாய் சேய் நலப் பணியோடு, மெகா கேம்ப், பூத் வாரியாக முகாம், கிராமம் கிராமமாக, வீடு வீடாக என வாரத்தில் 7 நாட்களும் தொடர்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மன உளைச்சல் உட்பட பல்வேறு நெருக்கடிக்குள்ளான செவிலியர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், ஐந்து அமைப்புகளை உள்ளடக்கிய VHN, SHN, CHN கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 19ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள். அடுத்து 23ஆம் தேதி சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதிலும் இருந்துவந்த செவிலியர்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள்.
இத்தகவல் முதல்வர் அலுவலக கவனத்திற்குச் செல்ல, ‘உடனே அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணுங்கள்’ என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு சி.எம். அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. 22ஆம் தேதி கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். அதற்கு செவிலியர் சங்க நிர்வாகிகள், ‘அமைச்சரிடம்தான் பேச வேண்டும்’ என கூறியிருக்கிறார்கள். அமைச்சரிடம் பேசிய செயலர் ராதாகிருஷ்ணன், 24ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இது பற்றி நம்மிடம் பேசிய கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் உஷாராணி, “24ஆம் தேதி காலை உயர்மட்ட அலுவலர்கள் உள்பட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டு அமைச்சர், எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கிராமத்தில் ஒரே இடத்தில் தடுப்பூசி பணியை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள இந்த வாரம் தவிர்த்து, இனிவரும் வாரங்களில் வாரத்தில் ஒரே ஒரு முகாம் என்றும், அதுவும் விடுமுறை நாள் இல்லாமல் பணி நாட்களில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முகாம் நடைபெறும் நேரத்தை காலை 7 முதல் இரவு 7 என்பதை மாற்றி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தலாம் என்றும் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தடுப்பூசி சம்பந்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
முதல்வர் அறிவித்தபடி ஊக்க ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். அதேபோல் எங்களது மற்றொரு கோரிக்கையான சமுதாய சுகாதார செவிலியர் பணியிலிருந்து தாய்-சேய் நல அலுவலர் 50 : 50 கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு 15 முதல் 20 நாளில் குழு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே நாங்கள் அதிகாரிகள் மட்டத்தில் பேசி எதுவும் நடக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, மனச் சுமைகளை போக்கி சுமுக தீர்வு தந்துள்ளது” என்றார்.