/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinayakar.jpg)
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து செப்டம்பர் 4ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் , அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு கடந்த மாதம் 9ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் தலையிட தடை விதிக்க கோரியும் விநாயகர் சதுர்த்தி மத்திய மண்டல குழு அறங்காவலர் ராமகோபாலன், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், விநாயகர் சிலைகள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். சிலைகளை கரைக்க மாட்டு வண்டிகளில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விநாயகர் சதுர்ச்சி அன்று சிலைகள் வைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.குறுகிய காலகட்டத்திற்குள் இந்த விதிமுறைகளை செயல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலே புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சமூக விரோதிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடும் என்பதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் பந்தலுக்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்குவது குறித்து செப்டம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)