Skip to main content

குறுவை சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீர் எவ்வளவு? - அரசு விளக்கம்!

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Government explanation How much water is released for kurvai cultivation

 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து எந்தெந்த மாதத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறித்த விவரங்களை செய்தி, மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10ம் தேதி மாலை சேலம் வந்திருந்தார். அன்று மாலை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜூன் 11ம் தேதி, கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி சேலம் அண்ணா பூங்கா அருகே நிறுவப்பட்டிருந்த 16 அடி உயர கலைஞரின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார். இதையடுத்து புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் 50 ஆயிரம் பேருக்கு 1700 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாலையில், கோனூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை நேரில் பார்வையிட்டார். ஜூன் 12ம் தேதி, டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை 5.26 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டிஎம்சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீரானது மழை, நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படும்.     

 

குறுவை பாசனத்திற்காக நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 4.91 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.86 டிஎம்சி தண்ணீரும், கடலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு 30.80 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு 5.88 டிஎம்சி  தண்ணீரும் மேட்டூர் அணையில் இருந்து தேவைப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று ஜூன் 12ம் தேதி காலை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு, மாத இறுதி வரை வழங்கப்படும்.

 

ஜூலை மாதத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் இருந்து படிப்படியாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து சம்பா, தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12.10 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையில் இருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.     

 

மேட்டூர் அணையின் கீழ் பகுதி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினமும் 1707 மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்துப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும்போது அணை மின்நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின்நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

மேட்டூர் அணையில் இருந்து குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், அடுத்த 15 நாட்களுக்கு 20 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு 22 ஆயிரம் கன அடி வீதமும், அடுத்த 15 நாட்களுக்கு தேவைக்கேற்ப 15 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வழங்கப்படும். டிசம்பர் மாதத்தில் 10 ஆயிரம் கன அடி வீதமும், ஜனவரி மாதத்தில் 12 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வழங்கப்படும். பாசன  தேவையைப் பொருத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்படும்.

 

இவ்வாறு செய்தி, மக்கள் தொடர்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்