ADVERTISEMENT

திடீரென விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! ஸ்தம்பித்த பணிகள்

10:22 AM Mar 24, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுத்த சம்பவம் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 23ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘நான்காண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும், அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் இப்போராட்டத்தின் காரணமாக ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலூகா அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைக்கு வராமல் அந்தந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் துறை, கலால் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களின் ஊழியர்களும் முழுமையாகப் போராட்டத்தில் பங்கேற்றதால் அந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. இதே போல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் 445 வருவாய்த்துறை ஊழியர்கள் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். தமிழகம் முழுக்க வருவாய்த்துறையினர் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அரசு அலுவலர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு துறையினர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT