
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 31ஆம் தேதி தமிழ்நாடு அரசுத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழு செயலாளர் தமிழ்ச்செல்வி கூறுகையில், “அரசு ஊழியர்கள் தொடர்ந்து இந்த மாநில அரசால் வஞ்சிக்கப்படுகிறார்கள். நாங்கள் அரசுக்குக் கொடுத்த கோரிக்கைகள் எதையுமே நிறைவேற்ற மறுக்கிறார்கள். குறிப்பாக அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். வேலைநிறுத்த காலத்தைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்குக் கூடுதலான பணியைக் கொடுக்கக் கூடாது. இப்படி 30 அம்ச கோரிக்கைகளை அரசுக்குக் கொடுத்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் முடிவுப்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனக் கூறினார்.