‘ஒரு வருடமாக சம்பளம் கொடுக்கவில்லை’ - அரசு ஊழியர் தற்கொலை!

government employee lost their life for not getting monthly salary

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தட்டச்சர் பணிக்காக டி.என்.பி.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு டைப்பிஸ்ட் வேலை இல்லாதகாரணத்தால் உடனடியாக அவரை இளநிலை உதவியாளராக பணியில் நியமித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து பத்து மாதம் கடந்தும் இதுவரையிலும் ஒருமாத ஊதியம் கூட கிடைக்காத சூழ்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜியிடம் சென்று காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“சார் என்னுடைய சொந்த ஊர் விருதுநகர். நான் இந்த பணிக்காகத்தான் சென்னைக்கு வந்து தரமணியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறேன். இந்த வேலையை நம்பி நானும் திருமணம் செய்து, தற்போது என் மனைவியும் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் எனக்கு 10 மாதங்களாக சம்பளமே கொடுக்கவில்லை என்றால் நான் எப்படி சார் வாழ்வது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு டீன் பாலாஜி பொறுப்பற்றத்தனமாகப் பேசி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனம் நொந்து போன காந்தி சி.எம். செல்லுக்கு, “சம்பளம் இல்லாமல் சாகிறேன்..” என மெயில் அனுப்ப, இந்த தகவல் மீண்டும் மருத்துவமனை டீனுக்கே வந்துள்ளது. அவர் உடனடியாக ஏ.ஓ.ராஜேந்திரனை அழைத்து நடந்ததைக் கூற, அவர் காந்தியை கூப்பிட்டு, “நீ சி.எம்.செல்லுக்குப் புகார் அனுப்பினால் உடனே உனக்குச் சம்பளம் போட்டு விடுவோமா? போய் வேலையைப் பாரு அது வரும் போது வரும்...” எனக் கூறியிருக்கிறார்.

government employee lost their life for not getting monthly salary

இதனால் மன வேதனையடைந்த காந்தி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் இறுதிச்சடங்கிற்காக விருதுநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் காந்தியின் மனைவி தனது கணவர் இறப்பிற்கு ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பாலாஜி மற்றும் ஏ.ஓ.ராஜேந்திரன் இருவரும் தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நன்றாகப் படித்து அரசு தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு வேலையில் சேர்ந்து காந்திக்கு ஊதியம் அளிக்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

hospital salary
இதையும் படியுங்கள்
Subscribe