
திருச்சி மாவட்டம் முசிறி மணமேடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான வயிற்றுவலி இருந்துவந்துள்ளது. அவ்வப்போது அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுவந்த நிலையில், எந்தவித பலனும் இல்லாத காரணத்தினால் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பொது அறுவை சிகிச்சை நிபுணர் இளவரசன் தலைமையில், மயக்க மருந்து நிபுணர் ராஜசேகர், செவிலியர்கள் மணிமேகலை, சுஜாதா, உதவியாளர் மணி உள்ளிட்டோர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்து அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகளில் இந்த அளவிற்குப் பெரிய கட்டியை அகற்றியது இதுவே முதன்முறையாகும்.”மேலும், நோயாளிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Follow Us