மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வழக்கு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

government doctors salary chennai high court tn govt

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்தவழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசுப் பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில், கடந்த 2009- ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354ஐ அமல்படுத்தாதது, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

நீதிபதி மகாதேவன் முன்னிலையில், இந்த வழக்கில் நடந்த விசாரணையின்போது, அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 வருடங்களாக, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கௌதமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பாப்பையா, வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

இதையடுத்து, 2009- ஆம் ஆண்டு அரசாணை அமல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா என, பிப்ரவரி 3- ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

chennai high court Doctors tn govt
இதையும் படியுங்கள்
Subscribe