Government doctor and female patient who took turns beating in Vellore

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியைச்சேர்ந்தவர் சுபா(36) இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரைக் காண ஆண் உறவினர் ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு ரவுண்ட்ஸ் வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரிடம், இது பெண்களுக்கான வார்டு ஆண்கள் உள்ளே வரக்கூடாது எனவெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

நான் யார் தெரியுமா, வெளியில எல்லாம் போக முடியாது... நீ போ என ஒருமையில் மருத்துவரிடம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது. திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாகத்தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது நோயாளி சுபாவும் மருத்துவரை தாக்கியுள்ளார். அதோடு தான் அணிந்திருந்த காலணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கிருந்து பெண் செவிலியர்கள் தடுக்க முடியாமல், ‘ஐயோ காப்பாத்துங்க காப்பாத்துங்க...’ என கத்தினர். அதன்பின் அருகில் இருந்த நோயாளியை பார்க்க வந்தவர்கள் இரு தரப்பையும் விலக்கி விட்டுள்ளனர்.

Advertisment

மருத்துவர்கள் தரப்பிலிருந்து காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதும், மருத்துவமனைக்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள மருத்துவரை தாக்குவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும்கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சுபா கூறுகையில், நான் கடந்த ஏழு நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு மன அழுத்தமும் உள்ளது. இந்நிலையில் என்னை காண வந்த உறவினரை வார்டுக்கு வந்த மருத்துவர் ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். இதை நான் கேட்டதற்கு என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் அவதூறாக திட்டினார். பின்னர் மருத்துவர் தான் எங்களை முதலில் அறைந்தார். அதன் காரணமாகவே மருத்துவரை தாக்கியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, “பெண்கள் வார்டில் ஆண்கள் நுழையக்கூடாது. ஆனால் அந்த நபர் படுக்கையில் படுத்துள்ளார். இதை கேட்டதற்கு மருத்துவரை தாக்கியுள்ளார்கள். செவிலியர்கள் விலக்கிய போதும் செருப்பால் பெண் நோயாளி மருத்துவரை தாக்கியுள்ளார். புகார் அளித்துள்ளோம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கூறியதில் உண்மைத்தன்மை இல்லை” எனக் கூறினார்.

Advertisment

அரசு மருத்துவமனையில் நோயாளி, மருத்துவர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.