Skip to main content

”அரசு கல்லூரிக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்” - அமைச்சர் சக்கரபாணி  

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

"Government College will soon have its own building" - Minister sakkrapani

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய கட்டடம் கட்டுதல் மற்றும் சண்முகாநதி ஆற்றின் குறுக்கே மானூர் செங்கத்துரையில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கும், மானூர் செங்கத்துரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்முகநதி ஆற்றின் குறுக்கே ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்கும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 

அதன்பின் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “முதல்வராக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தான், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதுவரை 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதைத் தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். 

 

புதியதாய் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக் கடன், சிறுவணிக கடன், மாற்றுத் திறனாளி கடன் என பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார். கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்துள்ளவர்களின் கடன்கள் தள்ளுபடி, திண்டுக்கல் மாவட்டத்தில் 4 அரசு கல்லூரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டியில் உயர்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிக்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். அதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். அதில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமையவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசு கல்லூரிகள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நத்தம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அரசு கல்லூரி இல்லை. அங்கு அடுத்த ஆண்டு அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 11 அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் வந்துவிட்டது. சாணார்பட்டி, வத்தலகுண்டு, குஜிலியம்பாறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், சண்முக நதியின் குறுக்கே மானூர் செங்கத்துரையில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், விருப்பாச்சியில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே ரூ.2.50 கோடி மதிப்பீட்டில உயர்மட்ட பாலம், பருத்தியூர் வேலுரில் பாலம், பொருளூரில் பாலம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்காம்பட்டியில் மேம்பாலம், சோழிப்பெரும்புதூரில் பாலம் என பல்வேறு இடங்களில் பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக தேவைப்படும் இடங்களில் பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களுக்குப் பதில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அந்த திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 

 

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கீரனூர் பேரூராட்சியில் சுமார் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, ரூ.50 கோடி மதிப்பீட்டில் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீரனாரில் மேலும் 300 வீடுகள் கட்டப்படவுள்ளன. மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 கி.வா. திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம், தும்மலப்பட்டியில் 130 கி.வா. திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. தேவைப்படும் இடங்களில துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 38 மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகளவில் நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுமார் 200 புதிய பகுதிநேர, முழுநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் குடிமைப் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


தமிழகத்தில 12 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைப் பிரித்து புதிதாக கள்ளிமந்தையம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கவும், ஒட்டன்சத்திரம் வட்டத்தைப் பிரித்து புதிதாக கள்ளிமந்தையம் வட்டம் உருவாக்கவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதையடுத்து, பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதையடுத்து பழனி மருத்துவமனையில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 9 மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்