‘Government can continue to maintain Veda house..’ - High Court order!

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக திறந்து வைக்கப்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும், தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, ‘திட்டமிட்டபடி துவக்கவிழாவை நடத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது. மேலும் துவக்க விழாவுக்குப் பின், போயஸ் தோட்ட இல்லத்தின்சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும், பிரதான நுழைவாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது’ என உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக தீபா, தீபக்கை அறிவிப்பதற்கு முன்னும், அறிவித்த பின்னும், வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும், ஏற்கனவே இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி கையகப்படுத்தியுள்ளதால்,சாவியை அரசே வைத்திருப்பதால், மனுதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு தொடரும் என்றும், வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.