
சென்னையில் சில இடங்களில் அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை, கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளைச் சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தாம்பரம் பணிமனையிலிருந்து மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் பூந்தமல்லி, ஆவடி அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வெளியே வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து, தமிழக முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் உரிய பேச்சுவார்த்தை நடத்திய பின் சிக்கல்கள் களையப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் போராட்ட அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.