/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-22_5.jpg)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னை அடுத்தக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள திருச்சி - சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த வண்டலூர் போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதற்கு போக்குவரத்து காவல்துறை போலீசார் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என்று முன்கூட்டியே தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதையும் மீறி அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் அபாரதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து மீதும் போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் மற்றும் obstruction என்று கூறி 1,000 ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-21_16.jpg)
அப்போது, ஓட்டுநர் போலீசாரிடம் எதற்காக அபராதம் என்று பேசிக்கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார் அபராத ரசீதை கையில் கொடுத்து விட்டு நகர்ந்து சென்றனர். இப்படி, இதுவரை 22-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளைக் குறிவைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர். விரைந்து தமிழக அரசு தலையிட்டு இந்தப் பிரச்சனைக்குத்தீர்வுக் காண வேண்டும் என்பதே போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதற்கிடையில், காவலர்கள் கவனத்திற்கு என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அதில், காவல்துறையினரும் சட்டப்படி போக்குவரத்துத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)