Skip to main content

மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ரகளை!

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

government bus windows broken drunker incident

 

சென்னை அரசு பேருந்தின் கண்ணாடிகளை மதுபோதையில் இருந்த நபர் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் கடந்த 2ஆம் தேதி சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக வந்த மாணவர்களை நடிகை ரஞ்சனா, பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு அவர்களைத் தாக்கினார். மேலும், படிக்கட்டில் பயணித்த மாணவர்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி பேருந்தின் நடத்துநரைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே நாளில் மதுபோதையில் இருந்த ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பேரம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி செல்வதற்காக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பூந்தமல்லி நிறுத்தத்தில் வந்த பின்பு பயணிகளை இறக்குவதற்காக பேருந்தின் ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்தினார். அப்போது அந்த நிறுத்தத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த பேருந்தின் கண்ணாடிகளை கட்டைகளை வைத்து சுற்றி சுற்றி வந்து உடைத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணிகள் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். 

 

மேலும், பதட்டமடைந்த பயணிகள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்று (05-11-23) கைது செய்துள்ளனர். மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த நபர் குருநாதன் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.