Skip to main content

‘சீட் பெல்ட் அணியவில்லை’ - அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Government bus drivers fined for not wearing seat belts in Nellai

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குக் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.." என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஓட்டுநர் நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்துவது, சீருடை அணியாமல் வண்டியை இயக்குவது என விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Government bus drivers fined for not wearing seat belts in Nellai

அந்த வகையில் தற்போது, நெல்லை வள்ளியூரில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் சீட் பெல்ட் மற்றும் சீருடை அணியவில்லை என்று இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்ததை தொடர்ந்துதான் தற்போது அரசு பேருந்துகளைக் குறிவைத்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையைப் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் குற்றம் சாற்றுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

துப்புரவுப் பெண் ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்! 

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 person who behaved rudely to the cleaning lady

மதுரை மாநகராட்சி பூங்காவும், விளையாட்டு மைதானமும்  பொன்மேனி –  ஜீவனா ஸ்கூல் எதிரில் உள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி பெண் பணியாளர்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது,  அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த நபர் செல்போனில் பேசியபடியே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். 

பெண் ஊழியர்கள் சத்தம்போட்டும், அவர்  காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒருவழியாக முடித்துவிட்டு சாவகாசமாகத்  திரும்பிய அவர், அந்த ஊழியர்களை ஒருமையில் திட்ட ஆரம்பித்தார். “நான் 20 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன். எப்பவும்போல இன்னைக்கும் போனேன். என்னைச் சத்தம் போடுற அளவுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா?”  என்று உரத்த குரலில் மிரட்டினார்.

 person who behaved rudely to the cleaning lady
நவீன்

அப்போது, பெண் ஊழியர்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த நவீன் “என்ன சார்.. தப்பும் பண்ணிட்டு சத்தம் போடுறீங்க? பெண்கள் இருக்கிற பக்கம் திரும்பி ஜிப்பை மாட்டுனீங்க. இதெல்லாம் சரியில்ல.” என்று கூற, அந்த நபர் மேலும் எகிற ஆரம்பித்தார். “பூங்காவுக்கு வர்றவங்க இந்த நாற்றத்தைத் தாங்குவாங்களா? துப்புரவு  வேலை பார்க்கிறவங்கன்னா.. இந்தமாதிரி ஆளுங்களுக்கு இளக்காரமா தெரியுது. கொரோனா காலத்துல உசிர மதிக்காம ரிஸ்க் எடுத்து வேலை பார்த்தோம். எங்க அருமை இவங்களுக்கு எங்கே தெரியப்போகுது?” என்று  புலம்பிய முனியம்மா தலையில் அடித்துக்கொண்டார்.

அந்த நபர் யாரென்று விசாரித்தோம். ஜீவனா ஸ்கூல் வேன் டிரைவராம்.  சொந்தமாக நான்கு வாகனங்கள் வைத்து ட்ரிப் அடிக்கிறாராம். கல் பெஞ்சில்  உட்கார்ந்திருந்த அந்த நபரிடம், சட்டத்தின் பார்வையில் நீங்கள்  நடந்துகொண்ட விதம் குற்றச்செயல்’ என்று அழுத்தமாகச் சொன்னோம்.  சுத்தத்தைப் பேணவேண்டிய இடத்தில் அசுத்தம் செய்பவர்கள்  திருந்த வேண்டும். 

Next Story

மாணவர்களின் ஆபத்தான பயணம்; கிராம மக்கள் வைக்கும் கோரிக்கை!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Students traveling dangerously in a bus near Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி  மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் படிக்கட்டில் தொங்கிச் சென்று பயணம் செல்லும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. படியில் தொங்கிக்கொண்டு செல்வதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.