Government Bus Drivers, Conductors Should Not Take Leave Transport Department

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

Advertisment

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாகச் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் 2 ஆயிரத்து 265 என மொத்தம் 4 ஆயிரத்து 365 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisment

இந்நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “23.10.2023 அன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது மற்றும் அதனையொட்டி தொடர் விடுமுறை வருவதால் 20.10.2023 முதல் 25.10.2023 வரை பேருந்தில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்வர். இதையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தவறாமல் அவரவர் பணிக்கு வர வேண்டும். மேற்குறிப்பிட்ட 6 நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது. இந்த நாட்களில் பணிக்கு வரவில்லை எனில் விடுப்பு அறிக்கை அனுப்பப்படும். அதன்பிறகு இது குறித்து தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விடுப்பு எடுக்காமல் ஊழியர்கள் பணிக்கு வந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.