சேலத்தில், மாரடைப்பால் உயிர் போகும் தருவாயில்கூட 45 பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிர் துறந்த நிகழ்வு, துயரங்களையும் கடந்து பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செப்டம்பர் 11, 2018ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தை, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுந்தரானந்தம் (38) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது 45 பயணிகள் அந்தப் பேருந்தில் பயணித்தனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்தத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு கையால் நெஞ்சை பிடித்துக்கொண்டே, மிகவும் பொறுப்புணர்வோடு சாலையோரமாக பேருந்தை நிறுத்தினார்.
அடுத்த சில நொடிகளில் அவர் தன் இருக்கையில் அமர்ந்தபடியே ஸ்டீயரிங் மீது தலை சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்தார். திடீரென்று பேருந்து நின்றதாலும், ஓட்டுநர் மயங்கியதாலும் அதிர்ச்சி அடைந்த நடத்துநர், பயணிகள் ஆகியோர் உடனடியாக ஓட்டுநரை அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கிருஷ்ண சுந்தரானந்தம் மாரடைப்பில் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் பேருந்து நடத்துநர், பயணிகளிடம் விசாரித்தனர். பின்னர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தப் பேருந்து, வி-ழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சேர்ந்தது என்றும், கடலூர் டிப்போவில் இருந்து இயக்கப்பட்டு வருவதும் தெரிய வந்தது. ஓட்டுநர் கிருஷ்ணசுந்தரானந்தத்திற்கு போக்குவரத்துத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள், சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநருக்கு பலமுறை முயற்சித்தும், அவர் செல்போனை எடுக்கவில்லை.
ஓடும் பேருந்தில் கடைசி மூச்சு போகும் தருவாயிலும்கூட 45 பயணிகளுக்கும் சிறு சேதம் கூட ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ஓட்டுநரின் செயல், அவர் இறந்த துயரத்தையும் கடந்து, பயணிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)