Government bus driver threatens youth in Madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் வணங்காமுடி. இவர் அங்குள்ள பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வணங்காமுடி தனது கடையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம், பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து, சமூக வலைத்தளங்களிலும் செய்தியாளர்களுக்கும் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து ஒன்று, அங்கிருந்த பயணிகளை ஏற்றாமல் அப்படியே புறப்பட்டுச் சென்றுள்ளது. இதையறிந்த வணங்காமுடி, இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இந்த சூழலில், கடந்த 14ம் தேதி காலை 12 மணியளவில், வணங்காமுடியின் கடைக்கு பேருந்து ஓட்டுநர் ஒருவர் வந்தார். உள்ளே வரும்போதே ரவுடி தோரணையில் வந்த அவர், "அந்த வீடியோவ எடுத்து நெட்ல போட்டது நீதானா? தேவை இல்லாத வேல பார்க்காத... நீ என்ன போலீசா.." என வணங்காமுடியிடம் தகராறில் ஈடுபட்டார்.

Advertisment

அப்போது பேசிய வணங்காமுடி, “என்ன அண்ணே போதைல இருக்கீங்களா? தண்ணிய போட்டுட்டு தான் வண்டிய ஒட்டுறீங்களா..” என கேட்டார். அதற்கு அந்த பேருந்து ஓட்டுநர், "ஆமா போதைல தான் இருக்கேன். நான் போதைல தான் வண்டி ஓட்டுவேன். இனிமே இந்த வீடியோ போடுற வேலைலாம் வச்சிக்காத. வெட்டியா உயிரை விட்டுட்டு போயிடாத. பார்த்து கவனமா இரு.... இல்லன்னா செத்து போயிடுவ...” என வணங்காமுடியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சோழவந்தான் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க உதவும் சமூக ஆர்வலரை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும், இதுபோன்று கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.