A government bus that crashed into a mountain road in salem

Advertisment

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டி, திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியாபுரம் வழியாக பச்சமலைக்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டத்தின் மலைப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த சாலையைத்தான் இந்தப் பகுதிகளில் நடைபெறும் விவசாயம் தொடர்பான பணிகளுக்கான வாகனங்களும், விளை பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களும் பயன்படுத்துகின்றன. இந்த சாலை மிக மோசமாக உள்ளதென அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் சோபனபுரம் - டாப் செங்காட்டுப்பட்டி இடையிலான 17 கிலோமீட்டர் சாலையைச் சீரமைத்து தரக் கோரி சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது சரி செய்யப்படாமலே இருந்தது.அதனால், இரு மாவட்ட மலைவாழ் மக்களும் இணைந்து ஊர் வசூல் செய்து, சொந்த செலவில் செம்மண் கொட்டி, தற்காலிகமாக சாலையைச் சீரமைத்தனர். சாலைகளில் வளர்ந்திருந்த செடி கொடிகள், மரக்கிளைகளையும் அப்புறப்படுத்தினர். இந்தப் பணி நடைபெற்றபோது வனத்துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடந்த சம்பவங்களும் உண்டு.

இந்நிலையில், ஆத்தூரிலிருந்து நேற்று (23.08.2021) பச்சமலைக்கு வந்த அரசுப் பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பெரியமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது, மழை காரணமாக ஈரப்பதத்தில் இருந்த சாலையில் பேருந்து சிக்கி இடதுபுறமாக சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பேருந்து கவிழவில்லை. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியில் குதித்தனர்.

Advertisment

தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், “தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தச் சாலையை சரி செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஆகையால் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் சாலை சீரமைக்கப்படும்”என்று கூறினர். அதனை ஏற்ற பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.