Skip to main content

அரசு பேருந்து நடத்துநர் உயிரிழப்பு- நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு! 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

GOVERNMENT BUS CONDUCTOR INCIDENT CHIEF MINISTER ANNOUNCED THE FUND

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (14/05/2022) அதிகாலை 03.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் திரு. தி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''இதை பிரதமர் சார்பில் கூறுகிறேன்''- சென்னையில் ராஜ்நாத் சிங் பேட்டி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (07.12.2023) டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். பின்னர் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றனர். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Minister Rajnath Singh consults with Chief Minister M.K.Stalin

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், 'தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக மத்திய அரசு 450 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகள் தேவைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளேன்' என்றார்.

 

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'தமிழக மக்களின் பாதிப்பை அறிந்ததும் பிரதமர் மோடி கவலை அடைந்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழு தமிழகம் வரும். சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்காக 521.29 கோடி ரூபாய் வழங்கப்படும். புயல் பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்பதை பிரதமர் சார்பில் கூறுகிறேன். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து செய்யப்படும்' என்றார்.