Government bus accident People who beat the driver!

Advertisment

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை ஒன்று செயல்படுகிறது. இந்த பணிமனையில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்து ஒன்று தினசரி 3 முறை சென்று திரும்புகிறது. அந்த பேருந்து நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் பெரியசாமி என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.

ராமநத்தம் - திட்டக்குடி சாலையில் வரும்போது ஆ.பாளையம் என்ற கிராமத்தின் மையப்பகுதியில் குறுக்கே நெடுஞ்சாலை செல்கிறது. இந்த கிராமத்தில் உள்ள கோயிலுக்கு ஊர் மக்கள் காப்பு கட்டி திருவிழா நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு சாமி ஊர்வலம் சாலை வழியே வந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து பெரியசாமி ஓட்டி வந்த பேருந்து கூட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் வீதி உலா வந்த உற்சவர் சாமி சிலை சேதமடைந்தது. மேலும், கூட்டத்தினுள் பேருந்து சட்டென புகுந்ததில் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிதறி ஓடினர்.

இந்நிலையில், இளைஞர்கள் சிலர் ஒன்று திரண்டு பேருந்து ஓட்டுநர் பெரியசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துசிகிச்சையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் எதிர்பாராமல் நடந்த சம்பவத்திற்காக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரை தாக்கியதை கண்டித்து நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் திட்டக்குடி அரசு போக்குவரத்துக் கழகம் கிளை பணிமனை மேலாளர் மாரியப்பன், போலீஸ் டி.எஸ்.பி சிவா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அவற்றை நிறைவேற்றுவதாக பணிமனை மேலாளரும், டி.எஸ்.பியும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்கினர். இதையடுத்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி ஓட்டுநர் பெரியசாமி மீது தாக்குதல் நடத்திய ஆ. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.