கோபிசெட்டிபாளையம் அருகே பெண்ணிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொலவபாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடம்பூர் மலைப் பகுதி, குன்றியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதன் பேரில் சான்றிதழ்களை கேட்டு பெண்ணின் வீட்டிற்கு முருகேசன் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற முருகேசன் சான்றிதழ்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
பீரோவில் இருந்து சான்றிதழ்களை எடுத்து வர வீட்டிற்குள் சென்ற அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற முருகேசன், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
அந்தப் பெண் முருகேசனிடம் இருந்து தப்பி, கடத்தூர் காவல் நிலையத்தில் குன்றி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மீது புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட கடத்தூர் காவல்துறையினர் முருகேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.