gopichettipalayam  people struggle by emphasizing various demands ...!

மத்திய, மாநில அரசுகள், 'வன உரிமை சட்டம் 2006'-ஐ உடனடியாக அமலாக்க வேண்டும். பழங்குடி மக்களுக்குச் சாதிச் சான்றிதழ்களைக் கால தாமதப்படுத்தாமல், உடனே வழங்கவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் நூற்றுக் கணக்கானோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில், இந்தப் போராட்டம் 23ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “2006 வன உரிமைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மத்திய பா.ஜ.கஅரசு கொண்டுவந்துள்ள, 2020 சுற்றுச்சூழல் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். தமிழக அரசு அனைத்துப் பழங்குடி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதோடு, கேரளா அரசாங்கத்தைப் போல் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தரமான கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

Advertisment

பழங்குடி மக்கள் நிலத்தை, பழங்குடி அல்லாதவர்களுக்குப் பத்திரப் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். சத்தியமங்கலம், பர்கூர் மலை வட்டாரத்தில், மரவள்ளிக் கிழங்கு கொள்முதலில் வெட்டுக் கூலி, வண்டி வாடகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பேசித் தீர்வு காண முத்தரப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு 'மலையாளி' என்ற சாதிச்சான்று வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட மலைப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் பழங்குடி மக்கள், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது, அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் கொடுத்தனர். இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். குத்தியாத்தூர், பர்கூர்பகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertisment