Skip to main content

கோடிக் கணக்கில் மோசடி; விசிக பெண் நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

goondas case registered against VCk woman executive arrested on fraud complaint

 

சேலத்தில், மோசடி புகார்களில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி காயத்ரி உள்ளிட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

 

சேலம் அம்மாபேட்டை பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி(43). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். இவர் சமூக நலத்துறையில் உயர் அதிகாரி பொறுப்பில் இருப்பதாகக் கூறி, தொளசம்பட்டியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரிடம் அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். ஆனால் உறுதியளித்தபடி காயத்ரி அரசாங்க வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார்.     

 

சந்தேகத்தின் பேரில் மஞ்சுளாவும், அவர் மூலமாகப் பணம் கொடுத்த மேலும் சில பெண்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் காயத்ரி அங்கு பணியாற்றவில்லை என்பது  மட்டுமின்றி, அவர் அரசுத் துறையிலேயே இல்லை என்பதும், பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதும் அவர்களுக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதை அறிந்த காயத்ரி, திடீரென்று தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் அவர் மீது மேலும் சிலர் புகார்  அளித்தனர்.     

 

அடுத்தடுத்து காயத்ரி மீது மோசடி புகார்கள் வரத் தொடங்கிய நிலையில்தான் அவரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்து மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இரண்டு மாத தீவிர தேடுதலில், சென்னை அசோக் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் அருகே ஒரு வீட்டில் காயத்ரியும்,  அவருடைய கூட்டாளிகளான ராஜசேகர், அசோக்குமார் ஆகியோரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.     

 

காவல்துறை விசாரணையில், அவர் பல பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய்  மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. மதியழகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 42 லட்சம் ரூபாயும், ஒரு காரும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார். வாசுதேவன் என்பவரின் மகளுக்கு அரசு உத்தியோகம் வாங்கித் தருவதாகச் சொல்லி 21 லட்சம் ரூபாய், சேலத்தாம்பட்டி அமுதாவிடம் தாட்கோ துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 42 லட்சம் ரூபாய், அழகாபுரம் விஜயாவிடம் மானியக் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி 5.30 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

 

ஆத்தூர் காளீஸ்வரன் என்பவரிடம் கட்சிப் பணிகளுக்குத் தேவைப்படுவதாகச் சொல்லி 8 லட்ச ரூபாயும், 1.70 லட்ச ரூபாய் செலவில் சிறுத்தை சிலை, வேல், கேடயம் ஆகியவற்றையும் செய்து வாங்கிக் கொண்டுள்ளார். இவற்றின் மூலம் காயத்ரி 25க்கும் மேற்பட்டோரிடம் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இது ஒருபுறம் இருக்க, காயத்ரி மீது கடந்த காலங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளதாகவும், அப்போதும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். 

 

அதுபற்றியும் காவல்துறை தரப்பில் விசாரித்தோம். “கடந்த 2021ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியில் வீடு புகுந்து 18 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் அப்போது காயத்ரி, இவருடைய  கூட்டாளிகள் லெனின், அசோக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து இருந்தனர். அதே ஊரைச் சேர்ந்த சில பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து, ஒரு கோடி ரூபாய் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அசோக்குமார்தான் இப்போதும் சேலம் மத்தியக் குற்றப்பிரிவினரால் கைது  செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கூட்டாளியான லெனின்தான், காயத்ரியை சமூக வலைத்தளங்களில் 'சேலம் காயத்ரி பிரதர்ஸ்' என்ற பெயரில் புரமோஷன் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இவரிடம் யாராவது பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டால், அவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவார். அடித்து, உதைப்பார்.  ஆத்தூர் அருகே தொழிலதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கிலும் காயத்ரி சில ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்” என்கிறார்கள் காவல்துறையினர்.  

 

இந்நிலையில்தான் மீண்டும் மோசடி புகார்களின் பேரில் காயத்ரியை அண்மையில் சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் பிணையில் வெளியே வந்தால் புகார்தாரர்களை மிரட்டுவார் என்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை  முடிவு செய்தது. இதையடுத்து காயத்ரியை நவ. 18 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, அவரை சேலம் பெண்கள் கிளைச் சிறையில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். காயத்ரியின் கூட்டாளிகளான அசோக்குமார், லெனின் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் காயத்ரி குண்டர் சட்டத்தில் கைது ஆகியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதற்கிடையில் காயத்ரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்