Goondas act on person in salem

Advertisment

சேலத்தில், தொடர்ந்து திருட்டு, வழிப்பறிக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் கண்ணன் (34). ரவுடியான இவர், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்து, 10 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள அலைபேசியைத் திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் விடுதலையான அவர், கடந்த மார்ச் 15ம் தேதி, அங்கம்மாள் காலனியில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து 1.10 லட்சம் ரூபாய் தங்கம், வெள்ளி பொருள்களை திருடிச்சென்றுள்ளார்.

Advertisment

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், கண்ணனும் அவருடைய கூட்டாளியும், பள்ளப்பட்டி பகுதியில் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 1000 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்குகளில் கண்ணனை கைது செய்த காவல்துறையினர் அவரை சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரிக்கு, துணை ஆணையர் கவுதம் கோயல் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.