Skip to main content

திருட்டு, வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனை; குற்றவாளிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Goondas for 3 criminals of robbery and lottery!

 

சேலத்தில் திருட்டு, வழிப்பறி குற்றங்களிலும், லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் மூன்று பேரை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் திருவாக்கவுண்டனூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த அர்ஜூனன் (24), ஜான்சன்பேட்டை கன்னாங்காட்டைச் சேர்ந்த பரசுராமன் (25) ஆகியோர் தொடர்ந்து கத்தி முனையில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி காவல்நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. இந்த குற்றங்கள் தொடர்பாக அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

 

அதேபோல், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்றதாக சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரட்டைச் சேர்ந்த மணிமாறன் (32) என்பவர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தொடர்ந்து சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாலும் அர்ஜூனன், பரசுராமன், மணிமாறன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, துணை ஆணையர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் பரிந்துரைத்தனர்.

 

அவர்களின் பரிந்துரையை சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா ஏற்று, உத்தரவிட்டதை அடுத்து, மூவரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்